ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA ) புதிய காய்தானா என்று உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான் ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி_2 கப்
புழுங்கல் அரிசி_2 கப்
வெந்தயம்_ஒரு டீஸ்பூன்
பழைய சாதம்_ஒரு கைப்பிடி
உப்பு_தேவைக்கு
ஆப்பம் செய்முறை::
வெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வை.
அடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம்,சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.
பிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வை.
இனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.
ஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்.
மீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வை.
ஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.
அதன்பிறகு என்ன!ஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.
தேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.
இரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.
தேங்காய்ப் பால் செய்முறை:
இரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.
நல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1
சர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)
பசும்பால்_1/2 டம்ளர் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (இதுவும் விருப்பமானால்)
ஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.
பிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகாட்டிப் பிழிந்துகொள்.
அதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்.(விருப்பமானால்)
தேங்காய்ப்பாலில் ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவிடு.
இப்போது தேங்காய்ப்பால் தயார்.
குறிப்பு:
சமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.