சனி, 10 நவம்பர், 2012

பிசினஸ்...100. டிப்ஸ்.

சூப்பர் டிப்ஸ்...
''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ் பண்ணி சம்பாதிக்கப் போறேன்!''

''என்னது... படிப்பை நிறுத்தப் போறியா...? படிக்கறது

நாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற?''
''மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!''

- என்ன... படித்ததுமே 'குபுக்' என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா? கூடவே, இந்த 'எஸ்.எம்.எஸ்' ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே!

ஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட் வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!

இணையதளம்...அது உங்கள் களம்!

1. விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை, இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. வலைப்பூ... ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ. போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

7. 'புரூஃப் ரீடிங்', 'எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

8. டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை கம்ப் யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

9. வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்... குழந்தைகளுக்கு கம்ப் யூட்டர் பயிற்சி கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும் இது உத்தரவாதம்.

10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

வீடே தொழிற்பேட்டை!

உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள், ஹேட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

15. மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

17. அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன் பெறலாம்.

18. வெட்டிங் பிளானர் என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம் என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

கைகொடுக்கும் இயந்திரங்கள்!

வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு (மேலும் விவரங்களுக்கு: ஷ்ஷ்ஷ்.ழீutமீ.நீஷீனீ).

பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன், ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே' என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

41. உங்கள் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் இருந்தால்... டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம். கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. சரியான நெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில், லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லை. ஆனால், தேவை இருக்கிறது. 'எந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ், தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டது' என்பது போன்ற தகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம். இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் தரும் கமிஷன், உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்... வாகன இன்ஷுரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ் என அத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம். கூடவே... வருமான வரி திட்டமிடுதல், ஆண்டு முதலீட்டுத் திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில். தொடர்புகளும், பேச்சுத் திறமையும்தான் முதலீடு. மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர். ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியை இன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றன. உங்கள் ஊரிலிருக்கும் எல்.ஐ.சி. கிளையின் மேனேஜரை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

45. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவை, புத்தகங்கள், காபி ஷாப் உள்பட ஏ டு இசட் சேவைகள் (மின்சார பில் கட்டுதல், டெலிபோன் பில் கட்டுதல்) போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செய்து தரலாம். விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்... வெற்றி நிச்சயம். அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும், எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள். இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். 'நெட்வொர்க்' எவ்வளவு விரிவாக... நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.

கலையிலும் கலக்கல் வருமானம்!

47. அனிமேஷன் துறை, புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.

50. 'கிளாஸ் பெயின்ட்டிங்' இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. ஃபேஷன் டிசைனிங்... வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.

54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்.

மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!

63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

65. மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழி. குறிப்பாக 'ஆம்வே' போன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்து பணியாற்றலாம். பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும். அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால், கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட 'என் குடும்ப கஷ்டம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க...' என்று மட்டும் மூக்கை சிந்த ஆரம்பித்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச் சாத்திவிடுவார்கள். அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

கதம்பம்!

68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. போட்டோ ஷாப், இன்டிஸைன், போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம். வீடியோவில் எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம். மெம்பர்ஷிப் அதிகம் கிடைத்தால்... பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.

விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. 'இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்' அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் ஐ.இ. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84. ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org

உஷார்... உஷார்!

85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. 'முன்பணம் அனுப்புங்கள்' என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.

இன்முகமே லாபம் தரும்!

96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.

பயிற்சி

100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.

1 கருத்து: